திருநாவுக்கரசர் பேஜர் கிருஷ்ணமூர்த்தி
பேட்டிகள்

50 லட்சம் செலவு பண்ணியிருந்தா ஜெயிச்சிருக்கலாம்

உதய் பாடகலிங்கம்

நின்ற இடத்திலேயே நிற்க வேண்டுமா, ஓடிக்கொண்டே இரு’ என்ற வைரமுத்துவின் வார்த்தைகள் இருநூறு சதம் பொருந்தக்கூடியது அரசியல் களம். இளம் வயதிலேயே அரசியலில் நுழைந்து, இன்றுவரை தொடர்ந்து இயங்கிவருபவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சு. திருநாவுக்கரசர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக, அரசியல் வாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார் இந்த அறந்தாங்கி அரசியலாளர். அந்திமழைக்காக சுருக்கமாகத் தான் கடந்து வந்த பாதையைத் திரும்பிப்பார்க்கிறார் திருநாவுக்கரசர்.

ஆச்சர்யப்பட்ட எம்ஜிஆர்!

பஞ்சாயத்து போர்டு தலைவராக இருந்த எனது தந்தையார் காங்கிரஸ்காரர். அது மட்டுமல்லாமல் அனுகூர் ராமநாதன், லட்சுமணன் என்று சில உறவினர்களும் கூட, அப்போது காங்கிரஸில் இருந்தனர். ஆனால், பள்ளிக்காலத்திலேயே எனது ஈர்ப்பு தி.மு.கழகத்தை நோக்கி இருந்தது.

கிறித்தவப் பள்ளிகள், கல்லூரிகளில் படித்தாலும், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டேன். 1972ல் எம்ஜிஆர் தனிக்கட்சி தொடங்கியபோது, நான் சட்டக்கல்லூரி மாணவன். அப்போது, என்னைப்போல ஒரு சில வக்கீல்கள் தான் அ.தி.மு.க.வில் இருந்தனர். 1977ல் தேர்தல் வந்தபோது, அறந்தாங்கி தொகுதியில் நான் போட்டியிட்டேன். அங்கு பிரசாரம் செய்ய எம்ஜிஆர் வருவதாகச் சொல்லியிருந்தார். ஆனால், கடைசி நேரத்தில் அவரால் வர முடியவில்லை.

வழக்கமாக, புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெறும் என்பது தான்  நிலைமை. அப்போதும் அதுதான் நடந்தது. ஆனால், அறந்தாங்கியில் மட்டும் நான் வெற்றி பெற்றேன். அதன்பிறகு எம்ஜிஆரைச் சந்தித்தபோது, ‘என்னால் பிரசாரத்திற்கு வர முடியவில்லை. எப்படி ஜெயிச்சீங்க?’ என்றார். ’உங்க பேரைச் சொல்லித்தான் ஜெயித்தேன்’ என்றேன். ‘எல்லோரும் என் பெயரைத்தான் சொன்னாங்க’ என்று சிரித்தார்.

இளைஞரணி வாய்ப்பு

1980-ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ்- திமுக கூட்டணி பெருவாரியான வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, தமிழக சட்டசபை கலைக்கப்பட்டது. அதனால் பலமான கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட வேண்டிய சூழலுக்கு ஆளானது அ.தி.மு.க. அந்த தேர்தலில் எனக்காக அறந்தாங்கி தொகுதியில் பிரச்சாரம் செய்தார் எம்.ஜி.ஆர். அப்போது, அதிமுகவில் இருந்து விலகிய ஒருவர் அங்கே சுயேட்சையாகப் போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்றால், மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவார் என்ற பேச்சு அடிபட்டது. அந்த நிலையில், ‘கட்சியை விட்டு விலகி சுயேட்சையாகப் போட்டியிடுபவர் வென்றாலும், அவரை மீண்டும் அதிமுகவில் சேர்க்க மாட்டேன். அதிமுக ஒன்றும் சத்திரம் கிடையாது. ஆனால், உங்கள் ஊரைச் சேர்ந்த திருநாவுக்கரசு ஜெயித்தால் மந்திரி பதவி கொடுப்பேன். தோற்றாலும், அவர் மந்திரிதான்’ என்று சொல்லிச்சென்றார்.  மக்களிடம், எனக்காக அவர் உறுதிகொடுத்தார் என்று சொல்லவேண்டும். அந்த தேர்தலில், நான் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றேன். அதன்பிறகு, முதலமைச்சர் வசம் இருந்த எக்சைஸ், டெக்ஸ்டைல்ஸ் போன்ற துறைகள் எல்லாம் அமைச்சரான எனக்குத் தரப்பட்டன.

திமுகவில் இளைஞரணி பலமாக இருப்பதைக் கண்டு, அதிமுகவிலும் அதுபோன்ற நிலை ஏற்பட என்னை அதன் பொறுப்பாளராக ஆக்கினார் எம்ஜிஆர்.  இப்போது அதிமுகவில் முக்கியப் பொறுப்பில் இருக்கும் பலர், அப்போது என்னால் அடையாளம் காணப்பட்டவர்கள்தான்.

எம்ஜிஆர் ஒரு ராஜா!

1980-84 காலகட்டத்தில் எம்ஜிஆருடன் இருந்த நாட்கள் அனைத்துமே வசந்தகாலம் தான். அவர் பிரியம் வச்சுட்டா, ஒருத்தர் மேல ரொம்ப அக்கறை எடுத்துக்குவார். அந்த நாட்கள்ல, தினமும் அவர் வீட்டில்தான் காலை டிபன் சாப்பிடுவேன். குளித்துவிட்டு நேராக அவர் வீட்டுக்கு சென்றுவிடுவேன். அங்கிருந்து கிளம்பும்போதும், நான்காவது அல்லது ஐந்தாவது காரில் இருக்கும் நான் ஏறிவிட்டேனா என்று பார்த்துவிட்டுத்தான் அவர் காரில் ஏறிக் கிளம்புவார். அந்தக் கால கட்டத்தில்தான், மக்கள் அவர் மீது வைத்திருந்த அபிமானத்தையும் தெரிந்துகொண்டேன். ஒருதடவை கட்சியினரோட சேர்ந்து கோயம்புத்தூர் சுற்றுப்பயணத்துல இருந்தேன். ‘உங்க தொகுதியில இருந்து 2 பேர் திமுகவில சேர்ந்துட்டாங்களாமே’ என்று கேட்டார் எம்ஜிஆர். ’அப்படி ஒண்ணும் இல்லையே’ என்றேன் நான். தினகரன் பத்திரிகையில் அதுபற்றி செய்தி வந்திருந்ததைப் பார்த்துவிட்டு, அவர் போன் செய்திருந்தார். ‘அவர்கள் இருவரும் முக்கியஸ்தர்கள் இல்லை. சாதாரணமானவங்க தான்’ என்றேன். ‘முக்கியஸ்தர்களா, இல்லையாங்கறது முக்கியமில்ல. அவங்க திரும்பவும் அதிமுகவில் சேர்ந்துட்டாங்கன்னு செய்தி வரணும்’ என்று கண்டிப்புடன் சொன்னார் எம்ஜிஆர். அதன்பிறகு, அவசர அவசரமாக கோயம்புத்தூரிலிருந்து ஊருக்கு சென்றேன். அவர்கள் இருவரையும் அதிமுகவில் இணைத்துவிட்டு, அதுபற்றி தகவல் கொடுத்தேன். இதுமாதிரி சில விஷயங்களில் அவர் கண்டிப்புடன் இருப்பார்.

எம்ஜிஆர் எப்போதும் ஒரு ராஜா மாதிரி தான் இருப்பார். கவர்ச்சியான சிரிப்பு, களையான முகம், நடை, உடை, பாவனை போன்ற விஷயங்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஒருமுறை இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். அவரை நான் தான் எம்ஜிஆரிடம் அழைத்துச் சென் றேன். அவரைச் சந்தித்துவிட்டு வந்தவர், ‘எம்ஜிஆர் ராஜகுடும்பத்தைச் சேர்ந்தவரா?’ என்று கேட்டார்.  அந்த அளவுக்கு, அவரது தோற்றமும் தோரணையும் இருந்தது.

 கோபப்படுத்திய ஜெயலலிதா

1984ம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நலக்குறைவுடன் இருந்த நேரம். அப்போதைய சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தில், கலைஞருக்கு வரும் கூட்டத்தை மேட்ச் பண்ண அதிமுகவில் ஒரு முகம் தேவைப்பட்டது. ஜெயலலிதாவுக்கும் எம்ஜிஆருக்கும் இருந்த ‘க்ளோஸ்னெஸ்’ தமிழக மக்கள் அறிந்தது. ஜெயலலிதா பிரசாரம் செய்தால் வெற்றி வரும் என்று நானும் சில அமைச்சர் களும் நினைத்தோம். ஆனால், ஜானகி அம்மா வருத்தப்பட்டார். அதன்பிறகு ஜெயலலிதா தமிழகம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதிமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.எம்ஜிஆர் உடல்நலம் மீண்டபிறகு நான் அமைச்சர் ஆனேன். எம்ஜிஆர் இறப்புக்கு பிறகு கட்சி உடைந்தது. நான், பண்ருட்டியார், கே.கே.எஸ்.எஸ்.ஆர்., நாவலர் போன்றவர்கள் ஜெயலலிதா பக்கம் இருந்தோம். அதன்பிறகு கலைஞர் ஆட்சிப் பொறுப்பேற்றதும், சட்டசபையில் ஜெயலலிதா தாக்கப்பட்டதும் எல்லோருக்கும் தெரிந்தது தான். அதனைத் தொடர்ந்து, ‘சட்டமன்றம் செத்துவிட்டது, நான் அங்கு வரமாட்டேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார் ஜெயலலிதா. அந்த நேரத்தில்தான், ஒரு பத்திரிகை ‘சட்டசபையில் திருநாவுக்கரசுக்கு உயர் பதவி கொடுக்க வேண்டும்’ என்று எழுதியது. அதனைக் கேள்விப்பட்டு, ஹைதராபாதில் இருந்து திரும்பினார் ஜெயலலிதா. அப்போது கொடநாடு, பையனூர் எல்லாம் கிடையாது. மருங்காபுரி இடைத்தேர்தல் நடந்துமுடிந்த சமயம் அது. அதில் வெற்றி பெற்றிருந்த எஸ்.ஆர். ராதாவை சட்டசபை தலைவர் ஆக்கினார் ஜெயலலிதா. நான் மிகவும் கோபப்பட்ட நாள் அது.

 பாஜகவுக்கு ஜெ. கண்டிஷன்

கடந்த 1999ம் ஆண்டு பாஜக கூட்டணியில் போட்டியிட்டு எம்பி ஆனேன். அந்த சமயத்தில் தான் வாஜ்பாய், அத்வானி, வெங்கையா நாயுடு போன்றவர்களோடு நட்பு ஏற்பட்டது. பாஜகவுக்கு வருமாறு பலமுறை அழைத்தார்கள். ‘மந்திரி பதவி கொடுங்க’ என்று கேட்டேன். ’ஒரு எம்பி ஜெயிச்ச இன்னொரு கட்சியும் கேட்பாங்க’ என்றார்கள். 2001க்குப் பிறகு, வாஜ்பாய் வற்புறுத்தலால் பாஜகவில் இணைந்தேன். 2004ல் மீண்டும் அதிமுக - பாஜக கூட்டணி தமிழ்நாட்டில் அமைந்தது. அப்போது ‘தமிழ்நாட்டில் எங்குமே திருநாவுக்கரசு போட்டியிடக்கூடாது’ என்று ஜெயலலிதா கண்டிஷன் போட்டார். அதனால், என்னை அழைத்த வாஜ்பாய் ‘கட்சிக்காக நீங்க தியாகம் செய்யணும்’ என்றார். அந்த நாளை என்னால் மறக்க முடியாது.

முடிவில், அந்தத் தேர்தல் கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், மத்தியபிரதே சத்தில் ராஜ்யசபா எம்பி ஆக்கியது பாஜக. அந்த காலகட்டத்தில் எனது நண்பர்கள், ‘இப்படியே இருந்தால் தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட முடியாது’ என்று வருத்தப்பட்டார்கள். அப்போது, பாஜகவிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகமிருந்தது. வாஜ்பாய் காலகட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.கவின் ஆதிக்கத்திற்குட்பட்டு இருந்தது. நிலைமை மாறியதால், பாஜகவை விட்டு வெளியேறினேன். ஆனாலும், வாஜ்பாய் மீதான மதிப்பு இப்போதும் அப்படியே இருக்கிறது.

பண அரசியலின் பலம்!

பாஜகவிலிருந்து வெளியேறியபிறகு, 2009ல் காங்கிரசில் உறுப்பினர் ஆனேன்.  கட்சியில் சேர்ந்து 5 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமனம். இதுவரை, என்மீது எந்தவித ஊழல் குற்றச்சாட்டுகளும் இல்லை. பல பொறுப்புகளில் இருந்தபோது, என்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு நல்லது செய்திருக்கிறேன்; அவர்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறேன். ஆனால் தொடக்க காலத்தில் அரசியலில்  சேவைக்கு மதிப்பிருந்தது. இப்போது பணத்திற்கு தான் மதிப்பு.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக, என் மகன் ராமச்சந்திரன் வேட்பாளராகப் போட்டியிட்டார்.  நாங்கள் ஓட்டுக்குப் பணம் கொடுக்கவில்லை. முடிவில் 500 ஓட்டுகள் வித்தியாசத் தில் என் மகன் தோற்றார். அப்போது என்னை வந்து சந்தித்த சிலர், ‘ என்னங்க... ஒரு 50 லட்சம் செலவு பண்ணியிருந்தா ஜெயிச்சிருக்கலாம்’ என்றார்கள். பணம் கொடுப்பதை நான் விரும்பவில்லை.

திடீரென்று யாரோ ஒருவர் தேர்தலில் நிற்கிறார். கட்சியின் பணபலமோ, தனிப்பட்ட பணமோ கொண்டு ஜெயிக்கிறார். தொகுதிக்காக மாடாக உழைக்கும் ஒருவனை பணம் கொண்டு தோற்கடிப்பது ஒரு கேலிக்கூத்து. இதுஒருவித துயரம். ஒரு வீட்டில் விழவேண்டிய ஏழு ஓட்டுகளில், பணம் வாங்கியதற்காக 3 ஓட்டு அந்தப்பக்கம் விழுகிறது. இப்படியே ஓட்டு பிரிந்து, அவர்கள் ஜெயித்துவிடுகிறார்கள். ஒருவித வெறுப்பு வந்தது அப்போது. பணத்திற்குதான் மதிப்பா என்று கோபம் வந்தது. ஆனால், நாம் இத்தனை ஆயிரம் ஓட்டுகள் வாங்கியிருக்கிறோமே என்ற மகிழ்ச்சியும் வந்தது. அந்த ஒரு நிமிடத்தில் பணப்பட்டுவாடாவை அடியோடு தடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது,” சொல்கிறார் திருநாவுக்கரசர்.